கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு தீபாவளிக்கு பிறகு “டெல்லி எப்படி இருந்தது’ என்பதே சரியான உதாரணம்.
இது குறித்து, நாடாளுமன்றக் குழு கொடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2024-25 நிதியாண்டில், மத்திய மாசுபாடு கட்டுப்பாடு திட்டத்திற்காக, சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.858 கோடி ஒதுக்கப்பட்டது.
அதில் வெறும் ரூ.7.22 கோடி மட்டும்தான் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் ஒரு சதவிகிதம்கூட அல்ல.
ஆனால், இந்த ஆண்டு முடிய இன்னமும் ஒரு சில நாள்களே உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பதில் என்ன?
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம், “இந்தத் திட்டத்திற்கான நிதி பெரும்பாலும் பயன்படுத்தப்படாததற்கு காரணம், மாசுகட்டுபாடு திட்டம், 2025-26 நிதியாண்டிலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு இன்னமும் ஒப்புதல் கிடைக்காததுதான்.
நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் போட்டாகிவிட்டது. ஒப்புதல் கிடைத்ததும், அவை அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிடும்” என்று கூறியுள்ளது.
ஆனால், இந்தப் பதிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றக் குழு ஒப்புக்கொண்டதுபோல தெரியவில்லை.

