Last Updated:
ஐடிசிஎம் ஏவுகணை, பிரம்மோஸ் ஏவுகணைக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இணைந்து, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஐடிசிஎம் (ITCM – Indigenous Technology Cruise Missile) என்ற ஏவுகணையின் சோதனையை விரைவில் மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஏவுகணை 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இதன் சோதனை வெற்றி, இந்தியக் கடற்படைக்கு ஒரு சக்திவாய்ந்த மற்றும் பல்துறை பயன்பாடு கொண்ட ஏவுகணையைப் பெற்றுத்தரும்.
இது தரை மற்றும் கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணையாகும். இந்த ஏவுகணையில் அதிநவீன விமான மின்னணுவியல் (avionics), மேம்பட்ட வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் எதிரி ராடாரிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்ட ‘கிரவுண்ட்-ஹல்’ அம்சம் ஆகியவை உள்ளன. இது முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உந்துவிசை அமைப்பு மூலம் இயங்குகிறது. ‘நிர்பய்’ பயண ஏவுகணையின் மேம்பட்ட வடிவம்தான் இந்த ஏவுகணை.
ஏவுகணையின் வழிநடத்துதல் அமைப்பு, கப்பலின் மல்டி-ஃபங்ஷன் ராடர் மற்றும் போர் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும். இது இலக்கைக் கண்டறிந்து தாக்கும் துல்லியத்தை உறுதி செய்யும். ஏவுகணையின் உள்நாட்டு ரேடியோ-அதிர்வெண் தேடு கருவி (radio frequency seeker) முந்தைய சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
கப்பல்களில் இருந்து எளிதாக ஏவுவதற்காக, டிஆர்டிஓ ஒரு தற்காலிக செங்குத்து ஏவுதல் அமைப்பை (Vertical Launch System – VLS) உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஏவுகணை சோதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படை பழைய ரஷ்ய UKSK ஏவுகணைகளுக்குப் பதிலாக, ‘யுனிவர்சல் வெர்டிக்கல் லாஞ்ச் மாட்யூல்ஸ்’ (UVLM) என்ற அமைப்பைப் பயன்படுத்த உள்ளது. இது பிரம்மோஸ் மற்றும் ஐடிசிஎம் போன்ற பல ஏவுகணைகளை ஒரே இடத்தில் இருந்து ஏவ உதவும்.
September 22, 2025 6:21 PM IST
எதிரி ரேடாரில் சிக்காமல் 1000 கி.மீ. தூர இலக்கை தாக்கும் ஏவுகணை.. இறுதிக் கட்ட பணியில் இந்திய ராணுவம்

