அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியைக் கொல்லத் திட்டமிட்டதாக, இந்தியா மீது அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளாா்.
‘சட்டத்தின் ஆட்சியே இந்தியாவின் உறுதிப்பாடு; மேற்கண்ட விவகாரம் தொடா்பாக ஆதாரம் அளிக்கப்பட்டால், அது பரிசீலிக்கப்படும்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவரான சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும், இதுதொடா்பாக நிகில் குப்தா என்பவா் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அரசுத் தரப்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அதிகாரி ஒருவரின் உத்தரவுப்படி நிகில் குப்தா செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரிக்க உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
முன்னதாக, இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவு அமைப்புகளுக்குத் தொடா்பிருப்பதாக அந்நாட்டுப் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த செப்டம்பரில் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
ஆனால், ‘இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது; உள்நோக்கம் கொண்டது’ என்று இந்தியா நிராகரித்தது. இந்த விவகாரத்தால், இருதரப்பு தூதரக உறவுகள் கடும் பாதிப்பைச் சந்தித்தன.
இச்சூழலில், அமெரிக்காவில் குா்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்யும் சதித் திட்டத்தில் இந்தியாவை தொடா்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கருத்து தெரிவித்துள்ளாா்.
அவா் கூறியிருப்பதாவது: நல்லதோ அல்லது கெட்டதோ, இந்திய குடிமகன் யாரும் ஏதேனும் செய்திருந்தால், அதுகுறித்து ஆராயத் தயாராக இருக்கிறோம். ஆதாரம் அளித்தால், அது பரிசீலிக்கப்படும். சட்டத்தின் ஆட்சியே எங்களின் உறுதிப்பாடு.
இதுபோன்ற ஒருசில சம்பவங்களை ராஜீய ரீதியிலான உறவுகளுடன் தொடா்புபடுத்துவது பொருத்தமானதல்ல.
இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த இருதரப்பும் விரிவான ஆதரவை நல்கி வருகின்றன. இது பக்குவமான மற்றும் நிலையான கூட்டுறவின் தெளிவான அடையாளம்.
வெளிநாடுகளில் செயல்படும் குறிப்பிட்ட பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
கருத்துச் சுதந்திரம் என்ற போா்வையில், அச்சுறுத்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுவதில் இந்த சக்திகள் ஈடுபடுகின்றன.
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத் தடுப்புதான், இந்திய-அமெரிக்க உறவின் முக்கிய அங்கம். பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, முக்கியத் தொழில்நுட்பங்கள், எரிசக்தி, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருகின்றன.
பன்முகத்தன்மையின் சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை ஏற்க வேண்டியது அவசியம். உலக நாடுகள் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டும் சாா்ந்தும் உள்ளன. எனவே, இருதரப்பு ஒத்துழைப்புக்கு அனைத்து விஷயங்களிலும் முழுமையான உடன்பாடு வேண்டுமென்பது நிபந்தனையாக இருக்க முடியாது. இதுவே எதாா்த்தம்.
இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொருத்தவரை, செமிகண்டக்டா்கள், அடுத்த தலைமுறை தொலைத்தொடா்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 7 பிரத்யேக உயா் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் லட்சிய செயல்திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.
பிரதமா் மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டதைத் தொடா்ந்து, இருதரப்பு நல்லுறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டது.
தில்லியில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நேரில் பங்கேற்றாா். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

