இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது மைக்ரான் நிறுவனத்துடனான ஒப்பந்தம், இந்தியாவின் சிப் தயாரிப்புத் தொழிலுக்கு ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமாகவும் புதிய விடியலாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த மைக்ரான் ஒப்பந்தத்தில் சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முக்கிய தொழில்நுட்பங்களை இந்தியா முற்றிலும் தவறவிட்டது.
இந்த மைக்ரான் ஒப்பந்தம் சிப்களை பேக்கேஜிங், அவற்றின் அசெம்பிளி மற்றும் சோதனைக்கு மட்டுமே என்பதை தொழில்நுட்பம் அறிந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள். இந்தியாவில் சிப்களை தயாரிக்கபோவதே இல்லை என்பதே இதன் உண்மை.
மைக்ரான் அமெரிக்காவிலும் சீனாவிலும் இத்தகைய சிப் தயாரிக்கும் ஆலைகளைக் கொண்டுள்ளது, அதன் தயாரிப்புகள் இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்டு சோதிக்கப்படும். எனவே சிப் தயாரிப்பதே இந்தியாவின் இலக்காக இருந்தால், அது மைக்ரான் ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேறாது எனலாம். இந்தியா பெறுவது சிப் தயாரிக்கும் தொழில்நுட்பத்தின் மிகக் குறைந்த பகுதியாகும் , வேறு இடங்களில் தயாரிக்கப்பட்ட சிப்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அசெம்பிள் செய்து சோதனை செய்வது மட்டுமே இந்தியா செய்யும்.
சிப் தயாரிப்பில் அமெரிக்கா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் போட்டியிடாமல், மலேசியா போன்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிடுகிறது. உலகின் OSAT (அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட்) சந்தையில் சுமார் 13% உடன் மலேசியா ஏற்கனவே இந்தப் பகுதியில் முன்னணியில் உள்ளது. அத்தகைய ஆலைகளை மலேசியாவிலும் இப்போது இந்தியாவிலும் கொண்டுவருவது அமெரிக்க நிறுவனங்களின் அபாயத்தை குறைக்கும் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தொழில் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சிப் உற்பத்தியின் குறைந்த டெக்னாலஜி தேவைப்படும் வேலைகளை இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு மாற்றுகிறார்கள், அதே நேரத்தில் மைக்ரானின் $100 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய உயர்நிலை சிப் தயாரிப்பை அமெரிக்காவிலேயே ஊக்குவிக்கிறார்கள்.

ஆலையை அமைப்பதற்கான மொத்த செலவு $2.75 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது, மத்திய இந்திய அரசாங்கம் 50% மானியத்தையும், குஜராத் மாநில அரசு 20% மானியத்தையும் இந்த தொகையில் வழங்குகிறது. மைக்ரான் மொத்த மூலதனத்தில் 30% மட்டுமே முதலீடு செய்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மைக்ரான் $2.75 பில்லியன் செலவாகும் ஆலையின் 100% உரிமையை வைத்திருக்கும், அதில் $825 மில்லியன் மட்டுமே முதலீடு செய்திருக்கும். eeNews Europe போன்ற தொழில்துறை அறிக்கைகள் கூட இதை “அதிக அளவிலான மானியம்” என்று அழைக்கின்றன.
இது போன்று மக்கள் வரிப்பணத்தில் 16,000 கோடியை மானியமாக கொடுத்து உருவாகப்போகும் தொழிற்சாலைக்கு முதலாளி இந்திய அரசாங்கமாக இருக்காது, அதன் முதலாளி அமெரிக்க முதலாளிகளாக இருப்பார்கள், மேலும் இது மோடி அவர்களின் கனவுத்திட்டமான Make in India திட்டத்திற்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்..

