Last Updated:
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,002 பேர் பலியாக, 2,376 பேர் காயமடைந்தனர். இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவியுள்ளது. பிரதமர் மோடி மியான்மர் மக்களுடன் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நில அதிர்வு, மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. மொத்தம் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல் நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியது.
இதில், மியான்மரில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இடிபாடுகளில் சிக்கி 2,376 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 10 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 68 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில், அனுப்பி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்குச் சென்றடைந்தன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, “ஆப்ரேஷன் பிரம்மா” என்ற திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. ”ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது” – அமித்ஷா
அதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி.130 ஜே என்ற விமானத்தில், தார்பாய், மெத்தை, போர்வை, நீர் சுத்திகரிப்பான், சோலார் விளக்குகள், மருந்து, மாத்திரைகள், கையுறைகள் உட்பட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை, மியான்மரில் உள்ள யாங்கூன் நகருக்குச் சென்றடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Spoke with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar. Conveyed our deep condolences at the loss of lives in the devastating earthquake. As a close friend and neighbour, India stands in solidarity with the people of Myanmar in this difficult hour. Disaster relief material,…
— Narendra Modi (@narendramodi) March 29, 2025
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மியான்மரின் மூத்த ஜெனரல் ஹெச்.இ. மின் ஆங் ஹ்லைங்குடன் பேசினேன். பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாகவும், இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. ஆபரேஷன் பிரம்மாவின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் நிவாரணப் பொருட்கள், மனிதாபிமான உதவி, தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் விரைவாக அனுப்பப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
March 29, 2025 2:35 PM IST

