Last Updated:
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட, எல்லை பகுதி மக்கள் உயிர் அச்சத்தில் உள்ளனர்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாதளத்தில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், உள்ளூர் குதிரையோட்டி ஒருவர் உட்பட மொத்தம் 27 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
ராஜாங்க ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமின்றி, இரு நாடுகளும் போர் ஒத்திகைகளிலும் ஈடுபட்டுவருகின்றன. அதன்படி, இந்திய விமானப்படை விமானங்களான ரஃபேல், மிராஜ், சுகோய் என அடுத்தடுத்து உத்தரபிரதேச கங்கா விரைவு தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன.
அதேபோல், லக்னோ-ஆக்ரா, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி இந்திய விமானப்படை ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த இரண்டு ஒத்திகைகளும் முற்றிலும் பகல் நேரத்திலேயே நடந்தன.
இதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. அரசும், ராணுவமும் இப்படி மும்முரமாக தயாராகி வர, இருநாட்டு எல்லையில் இருக்கும் கிராம மக்கள் பெரும் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள இந்திய கிராமத்தில் இருக்கும் மக்கள் போர் காலத்தில் தங்கள் உயிரை காத்துக்கொள்ள தங்கள் பகுதியில் ஏற்கனவே பங்கர்கள் எனப்படும் பதுங்கு குழிகளை அமைத்துள்ளனர். அதனை தற்போது சுத்தம் செய்துவருகின்றனர். ஒருவேளை போர் ஏற்பட்டால் முதலிலும், பெரிதாகவும் பாதிக்கக்கூடியவர்கள் எல்லைப் பகுதியில் இருக்கும் மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Jammu and Kashmir

