அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை சோதனையை தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனையை தொடர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் கட்டமாக கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் தொடங்கிய சோதனை, தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக நேற்று காலை 9 மணியளவில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதை நகர் பகுதியில் சக்திமெஸ் உரிமையாளர் கார்த்திக் மற்றும் அதிபர் ரமேஷ் ஆகிய இருவர் வீடுகளில் 5 வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.

மூன்று மணி நேரத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து அடுத்தடுத்து ஏழு இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக, மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழனி முருகன் நகைக்கடையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை சோதனை நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

