கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைச் சற்றும் எதிர்பார்த்திடாத பாகிஸ்தான் என்னவோ அதிர்ந்துபோனது மறுக்க முடியாத உண்மை.
‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களையும் வசிப்பிடங்களையும் அதிதுல்லியமாக தாக்கியதை பாகிஸ்தானால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தஞ்சமடைந்திருந்த 9 இடங்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. இதனால் லஷ்கர் – இ – தய்பா,ஜெய்ஸ் – இ – முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இழப்பைச் சந்தித்தன.
பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய தளமாக கருதப்படும் பஞ்சப் மாகாணத்திலும் இந்திய படைகள் குறிவைத்து தாக்கின. பாகிஸ்தானின் வான் வெளி பாதுகாப்பு அமைப்பை முறியடித்துக் கடந்து சென்று, அந்நாட்டின் உள்பகுதிகளுள் இந்திய விமானப்படை தாக்குதல்களை நடத்தியது.
மேற்கண்ட ஆபரேஷனில் பொதுமக்கள் இழப்பை சந்திக்கக்கூடாது என்பதில் இந்திய ராணுவம் தீவிர முனைப்பு காட்டியது கவனிக்கத்தக்கது.
இதற்கு கடும் எதிர்வினையாற்றிய அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று அன்றைய இரவே சூளுரைத்தது.அதனைத்தொடர்ந்து, மறுநாளான புதன்கிழமையிலிருந்து(மே 8) இந்திய எல்லைக்குள் அத்துமீறி வான் வழி தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியது. இன்று(மே 10) அதிகாலை வரையிலும் பாகிஸ்தானிலிருந்து டிரோன், ஏவுகணை தாக்குதல்கள் நீடித்தன.
