அதைத்தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தத்துடன் தேர்தலில் போட்டியிடாமல் அக்கூட்டணிக்கு ஆதரவளித்தார்.
பின்னர், தி.மு.க-வுடனான ஒப்பந்தத்தின்படி கடந்த ஜூலையில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். இந்த நிலையில், 2019-ல் தி.மு.க-வை எதிர்க்கும் வகையில் டிவி மீது ரிமோட் தூக்கியெறிந்தது பற்றி கமல் பேசியிருக்கிறார்.
தஞ்சாவூரில், பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகனின் மறைந்த தந்தை படத் திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய கமல், “எதுக்காக நீங்க தி.மு.க-வோடு தேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களே-னு கேட்டீங்கனா…
ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஆனா ரிமோட்ட வேற ஆள் தூக்கிட்டு ஓடிட்டான்.
ரிமோட் அங்க போகக் கூடாது, அது மாநிலத்தோடதான் இருக்கணும். கல்வியே அப்படித்தான் இருக்கணும்னு நெனைக்றோம், ரிமோட்ட கொடுப்போமா…
எடுத்துட்டு வா திருப்பி, ஒளிச்சாவது வைப்போம், ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து தூக்கிட்டு போயிட்றான்… அப்டினு எடுத்த முடிவு இது.
இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க. ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்தத் தொல்லைகள் இருந்தே தீரும். அதை வேண்டாம் என்று நினைத்தால், மாற்று அரசியல் என்பது பாசிசம், அது எங்களுக்கு வேண்டாம்” என்று கூறினார்.
