திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பாக, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, சுமார் 12 கோடி மதிப்பீட்டில் 72 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மட்டுமே கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
பீகார் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ்வின் வருகைக்காக அரை மணி நேரமாக முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்தினரும் கலைஞர் கோட்டத்தின் வாசல் அருகே நீண்ட நேரமாக அமர்ந்திருந்து அங்கு வந்த கழக உடன்பிறப்புகளைச் சற்று வருத்தமடையச் செய்ததை பார்க்க முடிந்தது.
இந்த கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் ஸ்டாலினின் குடும்பத்தினரும், தமிழ்நாடு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த திறப்பு விழாவிற்கு வராத காரணத்தினால், அவரது உரையினை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா கூட்டத்தில் வாசித்தார்.

