பிகாரில் உள்ள முஸ்லிம் மற்றும் யாதவ சமூகமக்கள் தனக்கு வாக்களிக்காததால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்கப் போவதில்லை என்று கூறியுள்ள பிகார் எம்.பி. ஐக்கிய ஜனதா தளத்தின் தேவேஷ் சந்திர தாக்கூரின் சர்ச்சையான பேச்சு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பிகாரின் சீதாமர்ஹி தொகுதியில் ஐக்கிய ஜனதாதளத்தின் வேட்பாளர் தேவேஷ் சந்திர தாக்கூர், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் அர்ஜுன் ராயை எதிர்த்து 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேவேஷ் சந்திர தாக்கூர் ஒரு பொதுக்கூட்டத்தில், சீதாமர்ஹியில் உள்ள முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி, பேசியுள்ள விடியோ வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில், அவர் பேசியுள்ளதாவது ”முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினர் வரலாம்; தேநீர் மற்றும் தின்பண்டங்கள் சாப்பிடலாம்; பின்னர் வெளியேறலாம்; ஆனால் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “முஸ்லிம் ஒருவர் என்னிடம் ஏதோ உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஐக்கிய ஜனதாதளத்திற்கு வாக்களித்தீர்களா என்று கேட்டேன். அவரும் இல்லையென்று ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை தேநீர் அருந்திவிட்டு வெளியேறுங்கள் என்று சொன்னேன். நான் உங்கள் கோரிக்கையை ஏற்க மாட்டேன் என்றும் சொன்னேன்” என்றும் கூறியுள்ளார்.
