அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நீண்ட நாட்களாக தனக்கு நோபல் கொடுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டபோது அதனைத் தான் தடுத்து நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறிக்கொண்டிருக்கிறார்.
இரு நாடுகளிடையேயான போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை என்று இந்தியா கூறிக்கொண்டிருக்கிறது.
தற்போது மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “உலக அரங்கில், இதற்கு முன்பு நாம் ஒருபோதும் மதிக்கப்படாத அளவுக்கு நாம் மதிக்கப்படும் விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

நாம் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம், போர்களை நிறுத்துகிறோம். எனவே இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நாங்கள் நிறுத்தினோம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வர்த்தகத்தைப் பயன்படுத்தி நான் அதை எப்படி நிறுத்தினேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவர்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறார்கள். மேலும் இரு தலைவர்களிடமும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நாங்கள் நிறுத்திய இந்தப் போர்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும்.
இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ போர் என அனைத்தையும் நிறுத்தினோம். அவற்றில் 60 சதவீதம் வர்த்தகம் காரணமாக நிறுத்தப்பட்டன.
