Last Updated:
ஆந்திரா பிரகாசம் மாவட்டம் கலுஜூவாலபாடு கிராமத்தில் குருநாதம் தனது மனைவியை பெல்டால் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ஆந்திராவில் மனைவியை, கயிற்றால் கட்டி வைத்து சினிமா வில்லன் போல கணவன் பெல்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கலுஜூவாலபாடு கிராமத்தை சேர்ந்த குருநாதம். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மூன்று மகள்கள், மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். 4 பிள்ளைகளை பெற்ற பிறகு அவருக்கு புது பெண் ஒருவர் தேவைப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவன் கைவிட்ட நிலையில், 4 குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு மனைவி வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கிடைக்கும் சிறிய தொகையைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், பல நாட்களுக்கு பின் திடீரென்று ஊர் திரும்பி குருநாதம் பேக்கரியில் வேலை செய்தது மூலம் கிடைத்த பணத்தை கொடு என்று கேட்டு மனைவியிடம் சண்டை போட்டிருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி குடும்ப சூழலை எடுத்துக் கூறி பணத்தை கொடுக்க முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த குருநாதம் மனைவியின் கைகளை கட்டிப்போட்டு திரைப்படம் வில்லன் போல பெல்டால் கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.
வலி தாங்கமுடியாமல் அந்த பெண் அலறிய காட்சிகள் காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. அருகில் வசிப்பவர்கள் அவரை தடுக்க முயன்று தோல்வி அடைந்தனர். படுகாயமடைந்த மனைவியை அவர் மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கிருந்த உறவினர்கள் குருநாதம் தன்னுடைய மனைவியை கடுமையாக தாக்கியதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் குருநாதமை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
September 18, 2025 3:34 PM IST

