கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணையன் என்பவருக்கும், கம்சலா அம்மாள் என்பவருக்கும், கடந்த 1965-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மத்திய அரசின் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றிய கண்ணையனுக்கு, கடந்த 1983-ம் ஆண்டு சௌதி அரேபியாவில் வேலை கிடைத்தது. அதனால் என்.எல்.சி பணியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றார்.
குழந்தைகளுடன் நெய்வேலியில் தங்கியிருந்த கம்சலா அம்மாள், சௌதி அரேபியாவில் இருந்து கண்ணையன் அனுப்பிய பணத்தில் வீடு, நிலம், தங்க நகைகள் உள்ளிட்ட சொத்துகளை தனது பெயரில் வாங்கியிருக்கிறார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, 1994-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிய கண்ணையன், “என் உழைப்பிலும், வருமானத்திலும் வாங்கிய சொத்துகளை, என் மனைவி கம்சலா அபகரித்துவிட்டார். நான் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் வேறு ஓர் ஆணுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் அந்த சொத்துகளை விற்கும் முயற்சியில் கம்சலா ஈடுபட்டிருக்கிறார். அதனால் அவரிடம் இருந்து எனது சொத்தை மீட்டுத் தர வேண்டும்“ என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன், “என் வருவாயில் வாங்கிய சொத்துகளை உரிமை கொண்டாடும் கம்சலாவுக்கும், அவருடன் தொடர்பில் இருப்பவருக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று கடந்த 1995-ம் ஆண்டு சிதம்பரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் கண்ணையன்.
மனைவி கம்சலாவுக்கு வேறு எந்த வருமானமும் இல்லை என்பதாலும், சொத்துகள் அனைத்தும் கணவரின் வருமானத்தில் வாங்கப்பட்டவை என்பதாலும், அவை அனைத்தும் கணவருக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது சிதம்பரம் நீதிமன்றம்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் கூடுதல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் கம்சலா. அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி, மனைவிக்கும் சொத்தில் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து கண்ணையன் கடந்த 2015-ம் ஆண்டு உயிரிழந்ததால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து கண்ணயனின் இரண்டு மகன்களும், மகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்த அந்த வழக்கில், “எங்கள் திருமணத்தின்போது என் பெற்றோர் கொடுத்த தங்க நகைகளை விற்பனை செய்துதான் அவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பினேன். என் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நிலத்தை விற்பனை செய்துதான் சில சொத்துகளை வாங்கினேன். மேலும் டெய்லர் தொழில் மூலமும் நான் சம்பாதித்தேன். அதனால் சொத்துகளில் எனக்கும் சம உரிமை இருக்கிறது” என்று விளக்கமளித்தது கம்சலா தரப்பு.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 21-ம் தேதி கண்ணையனின் மனைவி கம்சலாவுக்கு சொத்துகளில் சம உரிமை இருக்கிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழங்கிய அந்தத் தீர்ப்பில், “திருமணத்துக்கு பின் வீட்டையும் குழந்தைகளையும் மனைவி பார்த்துக் கொள்கிறார். அதனால்தான் கணவரால் தன் வேலை அல்லது தொழிலை திறம்பட செய்ய முடிகிறது. அதனால் அதன் மூலம் கிடைக்கும் வீடு, நிலம் மற்றும் நகைகள் உள்ளிட்ட சொத்துகள் மீது கணவன், மனைவி இருவருக்குமே சம பங்கு உண்டு. குடும்பத்தையும் குழந்தைகளையும் குடும்ப மருத்துவரை போல 24 மணி நேரமும் விடுமுறை இல்லாமல் மனைவி பார்த்துக்கொள்கிறார். அதை குறைத்து மதிப்பிட முடியாது.
அதனால் கணவர் பார்க்கும் 8 மணி நேர வேலையை மனைவியின் 24 மணி நேர பணியுடன் ஒப்பிட முடியாது. திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, சம்பளம் பெறாத வேலையாளாக மனைவி பணியாற்றுகிறார். மனைவியின் பங்களிப்பு இல்லையென்றால் வேலைக்கு ஆள்களை நியமித்து, அவர்களுக்கு சம்பளமாக கணிசமான தொகையைச் செலவிட வேண்டும். அப்படியான நிலையில் குறைவான பணத்தைத்தான் கணவரால் சேமித்திருக்க முடியும்.
அப்படிப்பட்ட மனைவிக்கு இறுதியில் எதுவும் இல்லை என்பது, அவர்களுக்கு வேதனை கொடுக்கும் ஒன்றாகும். கணவனும், மனைவியும் வாகனத்தில் உள்ள இரு சக்கரங்களைப் போன்றவர்கள். வேலை மூலம் கணவன் சம்பாதிப்பதும், குடும்பத்துக்காக மனைவி உழைப்பதும் சரி சமமானது. அது குடும்பத்திற்கான ஒரு கூட்டு உழைப்பு. அதன் மூலம் கிடைக்கும் பலன்களின் பெரும் பயனாளிகளாக கணவன், மனைவி இருவரும் உள்ளனர்.

அதனால் கணவன், மனைவி யார் பெயரில் சொத்துகள் வாங்கினாலும், அது பணத்தை சேமிக்க இருவரும் எடுத்த கூட்டு முயற்சியால்தான் வாங்கப்படுகிறது. குடும்பத்தை கவனித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து இதுவரை எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. அதே நேரம் இல்லத்தரசிகளின் பங்களிப்பை இந்த நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு தடையாக எந்த சட்டமும் இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை மொத்தம் ஐந்து சொத்துகள் உள்ளன. அதில் மூன்று சொத்துகளில் கண்ணையனுக்கும், அவரின் மனைவி கம்சலாவுக்கும் சம பங்கு இருக்கிறது. மற்ற இரண்டு சொத்துகளுக்கும் கம்சலா மட்டுமே முழு உரிமையாளர்” என்று தீர்ப்பளித்தார்.

