பெங்களூருவில் சொகுசாக வாழ்வதற்காக வீட்டு உரிமையாளரை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புறநகர் பகுதியான கெங்கேரியில் 39 வயதான குருமூர்த்தி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிவனபாளையா பகுதியில் சலூன் கடை வைத்துள்ள இவரின், வீட்டு மேல்தளத்தில் 24 வயதான மோனிகா என்ற இளம் பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியேறினர். தனது மனைவி திவ்யா, 2 வயது குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த குருமூர்த்திக்கு, கடந்த மே 10 ஆம் தேதி நிகழ்ந்த சம்பவம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. வழக்கமாக அன்றைய தினம் சலூன் கடைக்கு சென்றவர் காலை 11.30 மணியளவில், மனைவி திய்வாவுக்கு போன் செய்துள்ளார்.
தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தடவை கால் செய்தும் போனை எடுக்காததால் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, வீட்டுக்கு வந்து பார்த்த போது சமையலறையில் தனது மனைவி இறந்து கிடந்ததை கண்டு பேரதிச்சி அடைந்துள்ளார். அத்துடன், அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததால் அதுகுறித்தும் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
குருமூர்த்தியின் வீட்டு மேல்தளத்தில் வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண்ணான மோனிகாவை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணமாக பதிலளித்துள்ளார். இதனால், போலீசார் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி மோனிகாவின் ரியல் முகத்தை அம்பலப்படுத்தின. கோலார் மாவட்டத்தை சேர்ந்த மோனிகா, தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்துள்ளார். அவர், தன்னை ஆடம்பரமாக வெளிப்படுத்துவதுடன், ரீல்ஸ் மோகத்தில் மூழ்கி இணையதளத்தில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
காதலனுடன் தான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த மோனிகா, அவரை தனது கணவர் என வீட்டு ஓனரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், மோனிகா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் காதலன் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். காதலனுடன் ஆடம்பரமாக வாழ சம்பளம் போதாததால் பலரிடம் கடன் வாங்கி, மோனிகா சொசுசு கண்டுள்ளார். லட்சக்கணக்கில் கடன் வாங்கி நெருக்கடிக்கு ஆளான போதும், தனது காதலனுக்கு புதிதாக ஒரு சரக்கு வாகனம் வாங்கி கொடுக்க மோனிகா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக என்ன செய்வது என்று தெரியாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். அப்போது, தனது வீட்டு ஓனர் திவ்யா நகைகளுடன் சுற்றித்திரிவது அவரின் கண்ணை உருத்தியுள்ளது. அந்த நகைகளுக்காக திவ்யாவை கொலை செய்யவும் மோனிகா துணிந்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மோனிகா, அவரிடம் பேச்சுக் கொடுப்பது போன்று நைசாக கிச்சனுக்குள் நுழைந்துள்ளார். பின்னர், அங்கிருந்த திவ்யாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்ததை மோனிகா ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் மோனிகாவின் காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரீல்ஸ் நாயகியான மோனிகா, தனது காதலனுடன் உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு, இருக்க இடம் கொடுத்த வீட்டு ஓனரையே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சுதந்திர வாழ்க்கையை பறி கொடுத்து விட்டார் இந்த பெண் ஜெயிலுக்கு போன பிறகுதான் தெரியும் சுதந்திர வாழ்க்கையின் அருமை