
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்களை நாடு கடத்தும் பணி நடந்தது. இந்நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூச்சலிட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை அமெரிக்க அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் புதிதல்ல என்று கூறினார். மேலும் கடந்த 15 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் தரவுகளை வெளியிட்டார். 2009 முதல் மொத்தம் 15,756 சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நாடு கடத்தப்படும் செயல்முறை புதியதல்ல. இது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சட்டவிரோதமாக குடியேறிவர்கள் மீதான கடும் நடவடிக்கையில் நமது கவனம் இருக்க வேண்டும் என்றும், நாடு கடத்தப்பட்டவர்கள் தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார். அந்த தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவால் 2,042 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் 1,889 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் ஆண்டு வாரியான தரவை தற்போது பார்க்கலாம்.
2009ல் 734 பேர், 2010ல் 799 பேர், 2011ல் 599 பேர், 2012ல் 530 பேர், 2013ல் 515 பேர், 2014ல் 591 பேர், 2015ல் 708 பேர், 2016ல் 1303 பேர், 2017ல் 1024 பேர், 2018ல் 1180 பேர், 2019ல் 2042 பேர், 2020ல் 1889 பேர், 2021ல் 805 பேர், 2022ல் 862 பேர், 2023ல் 617 பேர், 2024ல் 1368 பேர், 2025ல் 104 பேர் என்று 2009ல் இருந்து இன்று வரை 15,668 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Also Read: இந்தியர்களை திருப்பி அனுப்புவது ஏன்? – அமெரிக்காவில் 7 லட்சம் இந்தியர்களுக்கு சிக்கல்
முதற்கட்டமாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதில் அரியானா மற்றும் குஜராத்தில் இருந்து தலா 33 பேர், பஞ்சாபில் இருந்து 30 பேர், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 3 பேர், சண்டிகரில் இருந்து இருவர் இருந்தனர். இந்தியர்கள் தரையிறங்கியதும், அவர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட புலம்பெயர்ந்தோர் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தங்களின் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். மத்திய அரசு தனது குடிமக்களை “மனிதாபிமான முறையில்” திரும்ப அழைத்து வர விமானத்தை அனுப்ப முடியாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக நாம் இருக்கிறோம். ஆனால், முதல் 10 இடங்களில் கூட இடம் பெறாத கொலம்பியா போன்ற நாடுகள் விமானங்களை அனுப்பி தங்கள் குடிமக்களை கண்ணியத்துடன் அழைத்து வரும்போது, நமது அரசாங்கம் விமானங்களை அனுப்பாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இந்த விமர்சனங்களுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த ஜெய்சங்கர், அமெரிக்காவின் நாடு கடத்தல்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (ICE) ஒழுங்கமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.
February 07, 2025 2:58 PM IST
கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்? முழு விவரம் இதோ!
