நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல விவாதங்களையும் கிளப்பியது.
அதன் தொடர்ச்சியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது தென்மாநிலங்களில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். அப்போது கூறிய அவர், “ஒரு காலத்தில் நாங்கள் தென்மாநிலங்களில் குறைவான தொகுதிகளிலேயே வென்றிருந்தோம். ஆனால் இப்போது அனைத்து மாநிலங்களிலும் தொண்டர்கள் கொண்ட கட்சியாக நாங்கள் உள்ளோம். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் நாங்கள் எங்கள் கணக்கை தொடங்குவோம்.
இதையும் படிக்க:
தமிழ்நாட்டில் நிச்சயம் 2 தொகுதிகளில் வெற்றி – அடித்து சொன்ன அமைச்சர் பியூஷ் கோயல்
விஜயவாடாவில் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆந்திராவிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலும் தெலங்கானாவில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளை விடவும் எங்களுக்கு ஆதரவு உள்ளது. கர்நாடகாவில் எங்களது தொகுதிகளை தக்க வைப்போம்” என தெரிவித்தார்.
மேலும் தற்போது கர்நாடகாவில் தற்போது சூழல் சரியில்லை எனவும் கடந்த முறையை போல கர்நாடகாவில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு, “அது ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பெரிதாக மாற்றம் இருக்காது. இது நாடாளுமன்ற தேர்தல். தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு கடந்த ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்று நினைவிருக்கும். பிரதமர் என்ன செய்தாலும், அதை ‘இளவரசர்’ எடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் கிழித்து விடுவார். அன்றைய பிரதமரும் கூட்டணி ஆட்சி என்பதால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தார். இதுபோல ஒரு அரசை நாட்டில் எந்த மக்களும் விரும்ப மாட்டார்கள்.
தென்மாநிலங்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதை போலதான் நடக்கும். நான் கணக்கிட்டு பார்த்ததில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சிகளைவிடவும் பாஜக அதிக எம்.பி.க்களை பெரும்” என தெரிவித்தார்.
.
