பங்குச்சந்தை சரிவில் நேர்மையான முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது, பிரதமர் நரேந்திர மோடியா?, செபியா? அல்லது கெளதம் அதானியா? எனவும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் மாதவி புரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் நேற்று (ஆக. 10) கட்டுரை வெளியிட்டது.
அதானியின் போலி நிறுவனம் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில், செபியின் தலைவர் மாதவிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விடியோ வெளியிட்டு ராகுல் காந்தி பேசியதாவது, ”மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இதனை சுட்டிக்காட்ட வேண்டியது எனது பணி. அதாவது, இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பங்குச் சந்தையை நிர்வகிக்கும் நிறுவனங்கள் சமரசம் செய்யப்படுகின்றன.
சட்டவிரோதமான பங்கு உரிமை மற்றும் வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவது என அதானி குழுமத்துக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. செபி நிறுவனத் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு அந்தப் பங்குகளில் தொடர்பு உள்ளது தற்போது வெளிப்படுத் தப்பட்டுள்ளது.
