ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு எதிராக அமைந்துள்ளது.
இத்தேர்தலுக்கு முன்பு மாநிலம் முழுவதும் பா.ஜ.க-வுக்கு எதிரான அலை வீசியதாக சொல்லப்பட்டது. குறிப்பாக `ஜாட்’ சமூக மக்கள் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால் காங்கிரஸ் ஹரியான தேர்தலை நம்பிக்கொண்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கிய போதும், காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது.

ஆரம்பகட்ட முன்னிலையையே காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். ஆனால் முடிவுகள் வரவர காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தகவல்களாக வந்து கொண்டிருந்தன. காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறமுடியாமல் தடுமாறியது. ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்ட பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென முதல்வரை மாற்றியது. இது போன்ற யுக்திகள் பாஜகவுக்கு கைகொடுத்திருப்பதாக தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பிக்கொண்டிருந்த ஹரியானா, அக்கட்சியை கைவிட்டதற்கு என்ன காரணம்?
காங்கிரஸ் கட்சியில் தேர்தலுக்கு முன்பே முதல்வர் பதவிக்கு அதிகாரப்போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாகவே இருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹோடா, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான குமாரி ஜல்ஜா ஆகியோர் இடையே இருந்த அதிகாரப்போட்டி காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தடையாக இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இணைந்து தேர்தலை சந்திக்க தவறிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதோடு ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணியில் காங்கிரஸிடம் சில குறிப்பிட்ட தொகுதிகளை கொடுக்கும்படி கேட்டது.

ஆனால் காங்கிரஸ் அக்கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தவறிவிட்டது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி சொதப்பியது என்றே கூறவேண்டும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்திடம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் ஒப்படைத்தது. அதில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இதே போன்று ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி பூபிந்தர் சிங்கிடம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைத்து காங்கிரஸ் கட்சி கையை சுட்டுக்கொண்டது. அதோடு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கவும் காங்கிரஸ் தவறிவிட்டது.
ஹரியானாவில் பிராந்திய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளனர். காங்கிரஸ் பெரும்பாலான தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்திருக்கிறது. பிராந்திய கட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அக்கட்சிகள் பெற்ற சொற்ப வாக்குகள் கூட பா.ஜ.க வேட்பாளர்களின் வெற்றிக்கு துணையாக மாறி காங்கிரஸ் தோல்விக்கு வித்திட்டது.
விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த ஜாட் சமூகத்தினர் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருப்பார்கள் என்பதால் அவர்களின் வாக்கு வங்கியைத்தான் காங்கிரஸ் ஹரியானாவில் பெரிதாக நம்பியிருந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹோடா ஜாட் இன மக்களை குறி வைத்து தேர்தலை சந்தித்தார். ஜாட் இன மக்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவர் இதர இன மக்களுக்கு கொடுக்க தவறிவிட்டார். இது பா.ஜ.க-விற்கு சாதகமாக மாறிவிட்டது. ஜாட் இனம் சாராத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜாட் இனத்திற்கு சாதகமாக காங்கிரஸ் செயல்படுவதை தெரிந்து கொண்ட பா.ஜ.க, மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் மற்ற சமூகத்தினரை குறிவைத்து பிரசாரம் செய்தனர். அதோடு குர்காவ், பரிதாபாத் மற்றும் பல்லாப்கர் போன்ற நகர்ப்புற வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக விழுந்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அதோடு ராஜஸ்தானையொட்டி இருக்கும் தெற்கு ஹரியானாவில் உள்ள அஹிர்வால் பகுதியில் இருக்கும் 28 சட்டமன்ற தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு மிகவும் கைகொடுத்துள்ளது. அஹிர்வால் பகுதி ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. அக்கோட்டையை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக பா.ஜ.க தலைவர்கள் தங்களது பிரசாரத்தை முன்வைத்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் ஹோடா ஜாட் இன மக்கள் அதிகம் வசிக்கும் ரோடக் பகுதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததாகவும், தெற்கு ஹரியானாவை புறக்கணித்ததாகவும் பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர். பா.ஜ.க-வுக்கு எதிராக வீசிய எதிர்ப்பு அலையை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதிகப்படியான நம்பிக்கையும் காங்கிரஸ் கட்சியை கைவிட்டதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளின் பெரும் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், மாநிலத்தில் 10 ஆண்டுகள் ஆட்சி உள்ளிட்டவை பாஜக-வுக்கு பெரும் மைனஸாக பார்க்கப்பட்டது. பாஜக-வின் இந்த மைனஸ்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது.
காங்கிரஸ் உள்ளூர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறிவிட்டதாகவும், பிரசாரத்தை முழு அளவில் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தோல்வி குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள காங்கிரஸ் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வோம் என்று தெரிவித்துள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

