மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப். 2) தெரிவித்தார்.
தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
சாமானிய மக்களுக்கான பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கு 12%லிருந்து 5%ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது.
சோப், ஷாம்பு, பற்பசை போன்ற பொருள்கள் மீது 5% மட்டுமே வரி வசூலிக்கப்படும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீதத்திலிருந்து 18% ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது.
பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்கள் மீது வரி கிடையாது.
நொறுக்குத் தீனிகள், வெண்ணெய் போன்ற பொருள்கள் மீது 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர், அதன் டயர் மற்றும் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கு இனி 18% வரி வசூலிக்கப்படும்.
சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை எந்தவகையில் குறைக்கலம் என்பது குறித்து கடந்த 9 மாதங்களாக பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
