பெரியாரின் 146வது பிறந்தநாள் இன்று.
அரசியல் கட்சியினர் உட்பட பலரும் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புகழைப் போற்றி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அரசியல் கட்சிக்கான தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ” சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப்பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என தந்தை பெரியாரின் புகழைப் போற்றி பதிவிட்டிருந்தார்.

தற்போது சென்னை பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார் விஜய். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரை போற்றி பதிவிட்டிருந்தது, விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தது போன்ற பல விஷயங்களால் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை காட்டுகிறார் என பேச்சுகள் எழுந்த நிலையில் தற்போது பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியதும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.
விஜய் பெரியார் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியது பற்றிய உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
