Last Updated:
அவரது சர்ச்சையான கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி பாஜகவினரே மறுப்பு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்மணி குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கங்கனா மீதான அவதூறு வழக்கின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான, கங்கனா ரனாவத் பல விவகாரங்களில் பகிரங்கமாக கருத்த தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எப்போதும் ட்விட்டரில் பிசியாக இருந்துவரும் கங்கனா, கடந்த 2021ம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் நடத்திய “டெல்லி சலோ” போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரது சர்ச்சையான கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி பாஜகவினரே மறுப்பு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 2021ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில், ’’ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி படத்தை ‘டைம்’ இதழ் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணி எனக் குறிப்பிட்டு இருக்கிறது. இப்போது, இவர் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
“இந்த மூதாட்டி போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள 100 ரூபாய் கொடுங்கள் போதும்” என்று கூறியிருந்தார் கங்கனா. கங்கனாவின் இந்த ட்வீட்டைப் பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்துப் போயினர். பஞ்சாபி பாடகர்கள் கன்வர் க்ரேவால், தில்ஜந்த் தோசாந்த், ஹிமான்ஷு குரானா உள்ளிட்ட பிரபலங்கள் கூட கங்கனாவை வறுத்தெடுத்தனர். அதற்கு காரணம், ‘டைம்’ பத்திரிகை பாராட்டிய மூதாட்டியின் பெயர் பில்கிஸ் பானோ. ஆனால், பில்கிஸ் மூதாட்டிக்குப் பதிலாக “மொஹிந்தர் கவுர்” என்ற மூதாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து கருத்து பதிவிட்டிருந்தார் கங்கனா.
பில்கிஸ் மூதாட்டி போராட்டத்தில் பங்கெடுக்க வந்தபோது டெல்லி காவல்துறையினர் அவரை தடுத்து தடுப்புக் காவலில் வைத்தனர். இந்த விவரம் கூட தெரியாமல் கங்கனா ட்வீட் போட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து கங்கனா, சில மணி நேரங்களில் தவறாக பகிர்ந்த புகைப்படத்தை நீக்கினார். எனினும் சர்ச்சை அவரை விடவில்லை. ஹக்கம் சிங் என்ற பஞ்சாப் வழக்கறிஞர் கங்கனாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ”கங்கனா நாட்டின் சீனியர் சிட்டிசனைக் காயப்படுத்தியிருக்கிறார். அவரை மட்டுமல்ல விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பெண்களையும் அவமானப்படுத்திவிட்டார்.
எனவே, அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். எனப் பலரும் போர்க்கொடி தூக்கினர். இதற்கிடையே, கங்கனா பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த மொஹிந்தர் கவுர் என்ற மூதாட்டி ‘தி ட்ரிபியூன்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், என்னிடம் 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. என் வயல்களில் வேலைச் செய்யும் பணியாளர்களுக்கு 500 ரூபாய் நான் சம்பளம் கொடுத்து வருகிறேன். ஒரு விவசாயி என்ற முறையிலேயே நான் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். விவசாயம் என்பது மிகவும் கடினமான விஷயம். அது தெரியாமல் நடிகை இப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது” என பதிலடி கொடுத்திருந்தார். இதையடுத்து தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இந்த மனு வியாழக்கிழமை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “உங்கள் அறிக்கைகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது வெறும் ரீ ட்வீட் அல்ல. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை சேர்த்துள்ளீர்கள் என்று கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
September 13, 2025 1:11 PM IST

