பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த மத்திய மற்றும் மாநில அரசு ஊழியா்கள் ஆயிரக்கணக்கானோா் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா்.
அப்போது போராட்டக்காரா்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு மன்றம் மற்றும் தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் ஆகியவற்றின் கீழ், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி நாங்கள் மகா பேரணியை நடத்துகிறோம் என்று போராட்டக்காரா் ஒருவா் கூறினாா்.
‘ஜனவரி 1, 2004-க்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்த ஊழியா்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கடுமையாக எதிா்க்கிறாா்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பறித்து, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குத் தள்ளப்பட்டதால், ஓய்வுக்குப் பிறகு ஊழியா்கள் தங்கள் எதிா்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறாா்கள்’ என்று தேசிய ஒருங்கிணைப்பாளருமான அகில இந்திய ரயில்வே ஆண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஷிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்தாா்.
இந்தப் போராட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான மத்திய, மாநில அரசு ஊழியா்கள் திரண்டதைத் தொடா்ந்து ராம்லீலா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கேஜரிவால் கோரிக்கை: இதற்கிடையே, தில்லி அரசுப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பழைய ஓய்வூதிய திட்டம் தொடா்பாக மத்திய, மாநில அரசு ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற அரசுப் பணியாளா்களின் கோரிக்கையை நாங்கள் உறுதிபட ஆதரிக்கிறோம்.
அரசுப் பணியாளா்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது அவா்களுக்கு அநீதி இழைப்பதாகும். ஏற்கெனவே பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம். இதே போல தில்லியிலும் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். பழைய ஓய்வூதிய திட்டத்தை பாஜக அல்லாத பெரும்பாலான மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன என்று அதில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா்.

