
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமரின் உஜ்வாலா பயனாளிகளுக்கு 14.2 கிலோ சமையல் சிலிண்டருக்கு ரூ.200 என்று அதிகபட்சம் ஆண்டுக்கு 12 முறை எரிவாயு நிரப்புவதற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2021 மார்ச் 1ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 9.59 கோடி பேர் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். இவர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த மானியத்திற்காக 2022-23 நிதியாண்டில் 6100 கோடி ரூபாயும், 2023-24 நிதியாண்டில் 7680 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
பல்வேறு புவிசார் அரசியல் காரணமாக சமையல் எரிவாயுவின் சர்வதேச விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த மானிய அறிவிப்பு உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உஜ்வாலா பயனாளிகள் சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை ஆகும். மேலும், உஜ்வாலா பயனாளிகள் நீடித்த சமையல் எரிவாயுவை ஏற்றுக் கொள்ளும் பாங்கு மற்றும் அவற்றின் தொடர் பயன்பாட்டை உறுதி செய்வதே முக்கியம். இதன் மூலம் அவர்கள் தூய்மையான சமையல் எரிபொருளுக்கு மாற முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

