Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில், அமித்ஷா காங்கிரஸின் தவறுகளை சாடினார். கனிமொழி, கங்கையை தமிழன் வெல்லுவான் என சூளுரைத்தார். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி கேள்விகள் எழுப்பினர்.
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதத்தின் போது, கங்கையை தமிழன் வெல்லுவான் நினைவில் கொள்ளுங்கள் என திமுக எம்பி கனிமொழி சூளுரைத்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரண்டாவது நாளாக காரசார விவாதம் நடந்தது. மக்களவையில் விளக்கம் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸின் தவறால்தான் பாகிஸ்தான் உருவானதாகக் கூறினார். நேருவின் தவறான முடிவால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதாகவும் குற்றம்சாட்டினார்.
சீனப் போரிலும் நேரு மென்மையாக நடந்து கொண்டதாகக் கூறிய அமித் ஷா, ஆனால் பஹல்காமில் அப்பாவி மக்களைக் கொன்ற தீவிரவாதிகள் நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிடக் கூடாது என்று பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக கூறினார். அதன்படி, காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய ‘ஆபரேஷன் மகாதேவ்’ தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தவர்கள் என்று கேள்வியெழுப்பியதன் மூலம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முயற்சி செய்வதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.
மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தாம் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருவது குறி்த்து கேள்வி எழுப்பினார் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் வந்ததை குறிப்பிட்டு பேசிய கனிமொழி, கங்கையை தமிழன் வெல்வான், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, உளவுத்துறையின் தோல்வியால் தான் பஹல்காம் தாக்குதல் நடந்ததாக கூறினார். தாக்குதல் நடப்பதற்கு முன்பே பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தது ஏன் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேள்வி எழுப்பினார்.
காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய அரசு செய்த பொய் பிரசாரத்தை நம்பி சென்றவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி சாடினார். எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்விகளால் இரு அவைகளிலும் அனல் பறந்தது.
July 30, 2025 6:36 AM IST

