மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடந்தது. மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் அவையை நடத்த நடந்த விவாதத்தில் மதிமுக நிறுவனர் வைகோ பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி பேசிய வைகோ, “அவையில் மணிப்பூர் பற்றி தீவிர விவாதம் சென்றுகொண்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமை, கொலைகள் என மணிப்பூரில் கொடூரம் நடந்துகொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரே கேள்வி, மில்லியன் டாலர் கேள்வி கேட்க விரும்புகிறேன்.
140 கோடி மக்களுக்கு பாதுகாவலரான இந்திய பிரதமர் மோடிக்கு, இந்த நேரத்தில் வெளிநாட்டில் என்ன வேலை?. நாங்கள் எப்போது கேட்டாலும், பிரதமர் அந்த நாட்டில் இருக்கிறார், இந்த நாட்டில் இருக்கிறார் என்கிறார்கள். அவர் என்ன அனைத்து நாடுகளுக்கும் பிரதமரா?, பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் தனது கடமையை செய்வதில் தோற்றுவிட்டார். நாடு நாடாக செல்கிறாரே தவிர, மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லையா என்ன?.” என்று மெதுவாக ஆரம்பித்து ஆவேசம் காண்பித்தார் வைகோ.
அப்போது குறுக்கிட்ட துணை சபாநாயகர் ஹரிவன்ஷ், “நீங்கள் பேசியது அவைக் குறிப்பில் இடம்பெறாது” என்று வைகோவை பார்த்து கூற கோபப்பட்ட அவர், “ஏன்?… அப்படியென்ன அவையில் இடம்பெறாத வார்த்தைகளை பேசிவிட்டேன். அவைக் குறிப்பில் இடம்பெறாத வார்த்தைகள் நான் பேசியதில் என்ன இருக்கிறது?.” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அவையில் பேச வேண்டாம். அது நாடாளுமன்றத்துக்குப் புறம்பானது. விஷயத்துக்கு வாருங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய வைகோ, “நாடு மற்றொரு விவகாரத்தில் கொந்தளிப்பில் இருக்கிறது.” எனப் பேசத் தொடங்கிய போது பாஜக எம்பிக்கள் குறுக்கிட்டனர். எனினும் வைகோ தொடர்ந்து பேசினார். அப்போது, “PM என்றால் பிரைம் மினிஸ்டர். ஆனால், நம்முடைய PM என்றால் பிக்னிக் மினிஸ்டர். ஆம், எல்லா நாடுகளுக்கும் பிரதமர் சுற்றுலா செல்கிறார்.” எனக் கூற, மீண்டும் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர்.
துணை சபாநாயகரோ, “நாடாளுமன்றத்துக்கு புறம்பான வார்த்தைகள். பிரதமர் மோடி அரசியலமைப்பு பதவியில் உள்ளவர். அவர் மீது இப்படியான கருத்துக்களை கூறக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் பேசத் தொடங்கிய வைகோ, “நான் திரும்பத் திரும்பக் கூறுவேன். எனக்கு உங்களைப் பற்றி கவலையில்லை. உங்களைப் போன்ற நிறைய பேரை நான் பார்த்துள்ளேன். நான் எனது மனதில் இருந்து பேசுகிறேன்.” என்று பேசினார்.
அப்போது பாஜக எம்பிக்கள் வைகோவை பார்த்து “Who Are You” எனக் கேள்வி கேட்க கோபமான வைகோ, “நான் வைகோ… நான், அண்ணா இயக்கத்திலிருந்து வந்தவன்.. இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் வந்தவன் நான்.. நீங்கள் யார்..” என்று ஆவேசமாக பதிலடி கொடுத்தார். வைகோவுக்கு ஆதரவாக ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட எம்பிக்கள் பேச அவையில் கூச்சல் உண்டானது.
எனினும் மீண்டும் தொடர்ந்த வைகோ, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. எப்பக்கம் வந்து புத்துவிடும், இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும். கன்னம் கிழிபட நேரும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம். இதுதான் கடந்த 80 ஆண்டுகால இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்களின் போர் முழக்கம்” என்று உரக்க பேசி அதிரவைத்தார்.
#JUSTIN “புதிய கல்வி கொள்கையை
குப்பையில் வீசவும்”
மாநிலங்களவையில் மதிமுக எம்.பி. வைகோ பேச்சு #Vaiko #Educationpolicy #RajyaSabha #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/DVIEYbQDPG— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 18, 2025
பேச்சின் இடையே குறுக்கிட்ட துணை சபாநாயகர், “உங்களின் நேரம் முடிந்துவிட்டது. அமருங்கள்” என்றார். அப்போது அலகாபாத்தில் நடந்த இந்து மாநாடு குறித்து பேசினார் வைகோ. அதற்கு, “தற்போது பேச வேண்டியதை பேசுங்கள்” என சபாநாயகர் கூற “இதுதான் விஷயம். இந்த மசோதாவில் எதை பற்றியும் அவையில் பேசலாம். எனக்கு நாடாளுமன்றத்தில் 24 வருட அனுபவம் உள்ளது. மிஸ்டர் துணை சபாநாயகர் உங்களுக்கு வேண்டும் என்றால் விதிகள் தெரியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும். புதிய கல்விக் கொள்கையைக் குப்பையில் தூக்கி எறிய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.” என்று ஆவேசமாக பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை சபாநாயகர் அணைத்தார்.
Delhi,Delhi,Delhi
March 18, 2025 2:06 PM IST
