Last Updated:
முன்பு 12 மற்றும் 18% வரி விதிக்கப்பட்ட பல அத்தியாவசிய பொருட்களின் வரி விதிப்பு 5 சதவீதமாக கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி வரிகள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பொருட்களின் விலை கணிசமாகக் குறையவுள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது ஒவ்வொரு குடிமகனுக்குமான வெற்றி என்று பெருமிதத்துடன் கூறினார்.
திருத்தப்பட்ட வரி விகிதங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அதாவது தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக தீபாவளியையொட்டி பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்பதால் இந்த ஆண்டு விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் அதன் கவுன்சிலில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடைய பிரதிநிதிகளால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வந்தன. அவை தற்போது மிக எளிமையாக்கப்பட்டு 5 மற்றும் 18 சதவீதம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சில அத்தியாவசிய பொருட்களுக்கான வரி பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பு 12 மற்றும் 18% வரி விதிக்கப்பட்ட பல அத்தியாவசிய பொருட்களின் வரி விதிப்பு 5 சதவீதமாக கொண்டு வரப்பட்டுள்ளன. அதே நேரம் சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற தீங்கு ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கு 40 சதவீத வரி வரம்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க மாநாட்டில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமான வெற்றி என்று தெரிவித்தார். இது ஒரு கூட்டு சாதனை என்று குறிப்பிட்ட நிதி அமைச்சர், இதனை வெறுமனே வரி குறைப்பு என்று கருதக்கூடாது என்றும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமான வெற்றி என்றும் கூறினார்.
September 14, 2025 3:22 PM IST
‘ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமான வெற்றி‘ – ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் குறித்து நிதியமைச்சர் பெருமிதம்

