பிரியங்கா – மணிமேகலை மோதல்
காமெடி பொழுதுபோக்கு சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மக்களிடம் கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
குக் வித் கோமாளி – 4 நிகழ்ச்சியை மணிமேகலையும், ரக்ஷனும் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதால், குக் வித் கோமாளி -4 நிகழ்ச்சி இம்மாதத்துடன் முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்கா வெற்றியாளர் எனத் தெரிகிறது. எனினும் இந்த எபிஸோடுகள் இன்னும் ஒளிபரப்பாகவில்லை.
இதனிடையே பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே இந்த நிகழ்ச்சியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெரிதும் பேசுபொருளாக மாறிய இவர்கள் விவகாரத்தைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தார்.
இதனால் மணிமேகலையின் ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் இருந்தவர் மணிமேகலை. இதனால், தொகுப்பாளராக மாறிய பிறகும் அவரிடம் பொழுதுபோக்குக்கு பஞ்சம் ஏற்பட்டதில்லை.
தனக சக கோமாளிகளுடன் நெருங்கிப் பழகி, புதிய கோமாளியிடமும் தன்னை உயர்த்திக்காட்டாமல், சகஜமாகப் பழகக்கூடியவர். இதனால் அவர் நிகழ்ச்சியில் இல்லாதது குக் வித் கோமாளிக்கு பெரிய இழப்பாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.
