“முதல் வரிசையில் இருந்து தலைவனை காக்கும் போர் வீரன் போல, நான் என்னை கருதுகிறேன். அதாவது, நவீன் பட்நாயக் மீதான தாக்குதல்களை நான் தாங்கிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.
அண்மையில் ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல் நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து, நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆதரவாளரும், ஒடிசா மாநில வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவருமான வி.கே.பாண்டியன் நியூஸ் 18 தமிழ்நாடு-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாகவே, அதாவது கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்தே இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டினார். ”ஏனெனில், மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவற்றின் தலைவர்களின் உடல் நிலை மிகவும் முக்கியம். அந்த தலைவரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ய முடியாத நிலையில், அவர்களின் உடல்நிலை குறித்து பேசுகின்றனர்” என வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.
”நவீன் பட்நாயக்கின் செயல்பாடுகள், வெளிப்படைத் தன்மை, கடின உழைப்பு, மேலாண்மைத் திறன், நிர்வாகத்திறன் என எது குறித்தும் விமர்சிக்க முடியாத சூழலில், இது போன்று வதந்திகளை ஒரு முக்கிய கருத்தாக எடுத்து, பரப்பி வருகிறார்கள். ஒவ்வொருமுறை இது போன்ற வதந்திகள் பரவும்போது, முதலமைச்சரோ அல்லது வேறு யாரோ வந்து, இது வதந்தி என்று விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த முறை, கடந்த ஒரு மாதத்தில் நவீன் பட்நாயக் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். ஆனாலும், அரசியலுக்காக இவ்வாறு தரம்தாழ்ந்து பேசி வருகின்றனர். இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.” என்றும் வி.கே.பாண்டியன் கூறினார்.
மேலும், அரசுப் பணியில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ”நான் நன்றாக இதில் பொருந்திவிட்டேன். எல்லாவிதமான தாக்குதல்கள் நடைபெற்று வந்தாலும், எனது முகத்தில் நீங்கள் மகிழ்ச்சியைப் பார்க்கலாம். நம் இலக்கு என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இங்கு ஈகோ பார்க்க கூடாது. நான் முதலமைச்சருக்கு உதவுவதற்காக வந்துள்ளேன். நவீன் பட்நாயக் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறிய வி.கே.பாண்டியன், உடலளவிலும், மனதளவிலும் நவீன் பட்நாயக் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அயராது ஓடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் தன்னை குறிவைத்து தாக்குதவதாகவும், ஆனால், அது நல்லதுதான், ஏனெனில், முதல் வரிசையில் இருந்து தலைவனை காக்கும் போர் வீரன் போல, நான் என்னை கருதுகிறேன். அதாவது, நவீன் பட்நாயக் மீதான தாக்குதல்களை நான் தாங்கிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.
.
