Last Updated:
குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்ட, கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக விளங்குவதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்
2027 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று நியூஸ் 18 க்கு அளித்த சிறப்பு பேட்டியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒன்பதரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் மாநிலத்தின் ஒட்டுமொத்த முகவரியும் முற்றிலுமாக மாறியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதிநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற ‘ரைசிங் பாரத்’ (Rising Bharat Summit) மாநாட்டில், நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். மேலும், பாஜகவுக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு இன்றைக்கு மக்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், சமூக நலத்திட்டங்களின் கடைசி நிலை வரை சென்றடைதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள உயர்வு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதை முக்கிய சாதனையாக முன்வைத்தார். “இன்று உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் இரவு நேரத்திலும் கூட எந்தவித பயமும் இன்றி தங்களது பணிகளை முடித்துவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப முடியும். மாநிலத்தில் இருந்த அச்சச் சூழலை மாற்றி அமைத்துள்ளோம். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிகரமான தொலைநோக்குத் தலைமையும், பாஜக தொண்டர்களின் கட்டுப்பாடும் தான் முக்கியக் காரணம்” என்று அவர் தெரிவித்தார்.
குடும்ப அரசியலைச் செய்யும் கட்சிகளையும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியையும் கடுமையாக விமர்சித்த யோகி ஆதிநாத், சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டத்தை ஒப்பிட்டுப் பேசினார். குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்ட, கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக விளங்குவதாகவும்,
அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே தங்களது அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் வளா்ச்சியை மையமாகக் கொண்டு செயலாற்றி வரும் பாஜக அரசு, மாநிலத்தின் எதிா்கால வளா்ச்சிக்காகத் தொடா்ந்து பாடுபடும் என்றும், வருகின்ற 2027 தேர்தலிலும் மக்கள் தங்களுக்கு முழு ஆதரவளிப்பார்கள் என்றும் முதலமைச்சர் யோகி ஆதிநாத் தனது பேட்டியில் தெரிவித்தார்.

