`அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என விஜய் அறிக்கைவிட்டதை எப்படி பார்க்கிறீர்கள்… இதனால் அ.தி.மு.க தலைமை ஏமாற்றமடைந்ததாக தெரிகிறதே!”
“த.வெ.க-வின் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, த.வெ.க – அ.தி.மு.க இடையே எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், தி.மு.க எனும் மக்கள் விரோத சக்தியை வீழ்த்த மக்கள் நல சிந்தனை கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகையால், ‘த.வெ.க., அ.தி.மு.க கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி’ என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறேன். ‘எங்கே எதிரிகள் ஒன்றிணைந்து விடுவார்களோ’ என்ற பயம் தி.மு.க-வுக்கு இருக்கிறது. குறிப்பாக விஜய் அரசியல் நடவடிக்கைகளை தொடங்கியபோது தி.மு.க-வினர் நடுங்கியதைப் பார்த்து தமிழ்நாடே ரசித்து சிரித்தது.”

“கூட்டணிக் கணக்குகள் இருப்பதனால்தான் ஒருக்கொருவர் விமர்சித்துக் கொள்வதில்லையோ?”
“முதலில் த.வெ.க-வை விமர்சிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு எதுவுமில்லை. அதேபோல ஆட்சியில் இருக்கும் தி.மு.க-வை விட்டுவிட்டு எதிர்க்கட்சியை விமர்சிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. அ.தி.மு.க-வை விஜய் விமர்சிக்காததுதான் தமிழ்நாட்டின் பிரதான பிரச்னைபோல பேச அவசியமும் இல்லையென கருதுகிறேன்”

`அதிகாரப் பகிர்வு இல்லாமல் யாராலும் ஆட்சியமைக்க முடியாது என்கிறதே பா.ம.க.. ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் கூட்டணியே அமைக்க முடியும் போலயே!”
“அதிகாரப் பகிர்வு சாத்தியப்படுமா என்பதை காலமும் சூழலும்தான் முடிவு செய்யும். என்னை கேட்டால் அ.தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்பதிலும் எங்கள் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என்பேன்”
“கள ஆய்வுக் கூட்டங்களில் எல்லாம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க.. ஆட்சியை பிடிக்கும் என்பது வேடிக்கையாக இருக்கிறதே!”
““தி.மு.க-வைப் போல சர்வாதிகார அமைப்பாக இல்லாமல், அ.தி.மு.க ஜனநாயக முறையில் செயல்படுவதால், மாற்றுக் கருத்துகள் ஆங்காங்கே வெளிப்படுகிறது. இதுவொன்றும் பெரிய பிரச்னையல்ல. ‘நாம் இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும்’ என்பதைக் களப் பணியாளர்களுக்கு உணர்த்தும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் பேசிய மொத்த உரையின் ஒரு புள்ளியை வைத்துக்கொண்டு `2026-லும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்குமா அ.தி.மு.க?’ என விவாதிப்பது சரியல்ல. `ஆட்சி அமைப்பது உறுதி` என்ற நம்பிக்கையோடு மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டுவருவதால், எங்கள் கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!”

“நா.த.க-விலிருந்து நீக்கப்பட்ட வெற்றிக்குமரன் தனி இயக்கத்தை தொடங்கிவிட்டாரே.. அந்த அளவுக்கு சீமானிடம் பிரச்னை இருக்கிறதா?”
“ ‘நவீன கொத்தடிமைமுறையில், ஜனநாயக விரோததன்மையோடு கட்சி நடத்திவரும் சீமானை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது’ என்பதுதான் அக்கட்சியிலிருந்து வெளியேறி அமைப்பு தொடங்கியவர்களின் கூற்று. அதேசமயம் தி.மு.க சொல்லும் அளவுக்கு சீமான் மோசமானவர் இல்லை. `அரசியல் சூழலை கருத்தில்கொண்டு கூட்டணி முடிவை கட்டாயம் எடுக்க வேண்டும்’ என்பதை சீமானுக்கும் சொல்வேன். நா.த.க கூட்டணி அமைத்து அது தி.மு.க-வை வீழ்த்தப் பயன்பட்டதாகச் சொன்னால், மகிழ்ச்சியடைவேன்.”
“சங்கி என்றால் சக தோழன், நண்பன் என சீமான் விளக்கமளித்ததால் அவருக்கு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வோடு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறதே!”
“சங்கி என்ற சொல்லுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூட இப்படியொரு விளக்கத்தை கொடுத்திருப்பாரா எனத் தெரியவில்லை. ஏன் அப்படி சொன்னார், அதன் பின்னணி என்னவென்பதை சீமான்தான் விளக்க வேண்டும்”
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

