கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக கட்சிப்பொறுப்பிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 16-10-2025 அன்று, தலைவர் ஃபரிதா நவாப்பின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, ஆளும்கட்சிக் கவுன்சிலர்களே நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக முன்வைத்தனர்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 10-ம் தேதியான நேற்று முன்தினம், நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் `வாக்குச்சீட்டு’ நடைமுறையில் நடத்தப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்ற நகராட்சியில் மொத்தமிருக்கும் 33 கவுன்சிலர்களில், 27 பேர் ஆதரிக்க வேண்டும். தி.மு.க கவுன்சிலர்கள் 21 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 26 கவுன்சிலர்கள் வாக்களிக்கத் தயாரானார்கள்.
அப்போதும், மேலும் ஒருக் கவுன்சிலரின் ஆதரவுத் தேவை என்பதால், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேரிடமும் தி.மு.க-வினர் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 4 பேர் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், 9-வது வார்டு கவுன்சிலரும், கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க மகளிர் அணிப் பொருளாளருமான எம்.நாகஜோதி என்பவர் மட்டும் சம்மதித்தார்.
