போதை பொருள் கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது திமுக நிர்வாகிகள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் முக்கிய நபரான முன்னாள் திமுக நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வீட்டில் நேற்று இரவு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது வீட்டிற்கு சீல் வைத்து விட்டு சென்றனர் ..
இந்நிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகர் ஒன்றாவது தெருவில் உள்ள திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசுவின் கொரியர் அலுவலகமான ‘சகாரா எக்ஸ்பிரஸ்’ என்ற அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.

மருத்துவமனை அனுமதி சீட்டு
இதனையடுத்து இந்த சோதனையை உறுதி செய்வதற்காக பாலிமர் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்த திமுக நிர்வாகிகள் இங்கு எதற்காக வந்தீர்கள் என கேட்டு ஒளிப்பதிவாளர் செந்திலை மிகக் கொடூரமாக தாக்கி கேமராவை பிடுங்கிக் கொண்டனர்.
பின்னர், ஒளிப்பதிவாளர் செந்திலை அடித்து தாக்கியதுடன் அவரை இழுத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதுடன் கேமரா எடுத்த வீடியோ பதிவுகளை அழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவல் அறிந்து திமுக நிர்வாகி சிற்றரசு அவரது ஆட்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் அவர்கள் ஒளிப்பதிவாளரை விடுவித்தனர். மேலும் இதில் காயமடைந்த செந்தில் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தனியார் செய்தி சேனல் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே நேரத்தில், திமுக கட்சியினரும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது..
இதற்கிடையே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அவர், “தனியார் செய்தி ஒளிப்பதிவாளர் செந்தில் அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து எவ்வித வழக்கும் பதியாமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் காவல்துறை, உடனடியாக வழக்கு பதிந்து, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக குண்டர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக உள்ளார்ந்த அக்கறையோடு இதுகுறித்து பேசும் ஆர்வலர்களுக்கும் எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் அளிக்காமல், அவர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யுமாறு இந்த திமுக அரசின் முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்
