கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம், தொழிற்கூடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எட்டு நாள்கள் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், கரூர் மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரபட்டியில் இருக்கும் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தற்போது திடீர் சோதனையைத் துவக்கியிருக்கின்றனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, கரூர் வெங்கமேடு பகுதியிலுள்ள கருப்பணசாமி கோயில் தெருவில் அமைந்துள்ள சண்முக செட்டியார் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை துவக்கியிருக்கின்றனர். மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்போடு இந்த சோதனையை அதிகாரிகள் தொடங்கியிருக்கின்றனர். தற்போது, மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

