பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நிகழ்வின் துவக்க விழாவில் பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் , என் மக்கள்’ நடைபயணம் வரும் 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஊழலற்ற அரசாங்கம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் , பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, பாஜக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விடியல…முடியல எனும் வாசகத்துடன் கூடிய மக்கள் புகார் பெட்டியில் மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். நடைபயணம் 39 நாடாளுமன்ற தொகுதி, 234 சட்டமன்ற தொகுதியையும் கடந்து செல்லும்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நிகழ்வின் துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொள்ள உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டெல்லியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு தென்னிந்திய பிரதிநிதி அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

