தியாகியை விடுங்கள்! துரோகியை தெரியுமா?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு ‘’நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க் கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.தியாகியை விடுங்கள். துரோகியைத் தெரியுமா? ’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி. அம்மையார் ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார்; அம்மையார் ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜகவின் பாதம்தாங்கியாக மாறி ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!
