Last Updated:
உலக அளவில் பொருளாதார சவால்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் இந்தியாவின் உள்நாட்டு நுகர்வு என்பது தொடர்ந்து வளர்ச்சி அடையும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரி விதிப்பு கொள்கைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து நியூஸ் 18 மாநாட்டில் பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்சம் 10 சதவீத வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்கள் இந்தியாவிலிருந்து 18 சதவீத ஏற்றுமதி வரியுடன் அனுப்பப்படுகின்றன. அதே நேரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 36 சதவீத வரியை அமெரிக்கா விதித்து வருகிறது. இதனால் பொருளாதார குளறுபடிகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் “ரைசிங் பாரத்” என்ற நியூஸ் 18 நடத்தும் முக்கிய மாநாட்டில் பங்கேற்று பிரபல பொருளாதார அறிஞரும் EY இந்தியாவின் தலைவருமான ராஜிவ் மேமாணி கூறியதாவது-
“அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வலுவான நிலையில் இந்தியா உள்ளது. நிச்சயமாக வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு பயனுள்ளதாக அமையும். மிகவும் சிக்கலான உலகளாவிய வரி விதிப்பு சூழலுக்கு சில வர்த்தகம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது.
உலகளாவிய வரி விதிப்பு முறைகளை மிக சிலரே புரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்காவில் உற்பத்தியை கொண்டு வருவதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். இதனால் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஏற்படும். வணிக முதலீட்டு முடிவுகளை உடனடியாக எடுத்து விட முடியாது. மேலும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் கூடுதல் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். வேற்றுமை விதியை அதிகரிக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மற்றொரு பொருளாதார வல்லுனரான ராகுல் ஜெயின், “டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு கொள்கைகளால் முதலீட்டாளர்களிடையே தயக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறுகிய காலத்தில் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம். மூலதன மந்த நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் பொருளாதார சவால்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் இந்தியாவின் உள்நாட்டு நுகர்வு என்பது தொடர்ந்து வளர்ச்சி அடையும்” என்று தெரிவித்தார்.
April 08, 2025 5:45 PM IST
ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைளால் என்ன விளைவுகள் ஏற்படும்? நியூஸ் 18 மாநாட்டில் பொருளாதார நிபுணர்கள் விளக்கம்

