விகடனின் #DoubtOfCommonman பகுதியில் இன்டர்போல் நோட்டீஸ் என்றால் என்ன? இது யாரால், எதற்காக வழங்கப்படுகிறது? அப்படி ஒரு போலீஸ் படை இருக்கிறதா என்ற கேள்வியை வியாசர்பாடியைச் சேர்ந்த ரகுராமன் என்பவர் எழுப்பியிருக்கிறார். அவருக்கான பதில் இங்கே…

பன்னாட்டுக் குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது International Criminal Police Organization. இந்த அமைப்பை சுருக்கமாக, இன்டர்போல் (INTERPOL) என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். இவ்வமைப்பினை ஆங்கிலத்தில் ICPO என்று சுருக்கிச் சொல்வதுமுண்டு.

1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் உலகிலுள்ள 195 நாடுகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. பிரான்ஸ் (France) நாட்டிலுள்ள லியான் (Lyon) எனும் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இவ்வமைப்பிற்கு சிங்கப்பூரில் Global Complex for Innovation என்ற அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
அர்ஜென்டினா நாட்டிலுள்ள புவனஸ் அயர்ஸ் (Buenos Aires), கேமரூன் (Cameroon) நாட்டிலுள்ள யாவுண்டே (Yaounde), கோட் டி ஐவரி (Cote d’Ivoire) அபித்ஜன் (Abidjan), எல் சால்வடார் (El Salvador) நாட்டிலுள்ள சான் சால்வடார் (San Salvador), கென்யா நாட்டிலுள்ள நைரோபி, தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக், ஜிம்பாப்வே நாட்டிலுள்ள ஹராரே எனும் ஏழு நகரங்களில் மண்டல அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதே போன்று, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்புப் பிரதிநிதி அலுவலகம், பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி அலுவலகம், எத்தியோப்பியா நாட்டிலுள்ள அடிஸ் அபாபா நகரில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி அலுவலகம் என்று இவ்வமைப்பின் மூன்று சிறப்புப் பிரதிநிதி அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் National Central Bureau எனும் 195 அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இன்டர்போலின் பணிகள்
உலகில் நடைபெறும் பல்வேறு குற்றங்களை எதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பாக, இன்டர்போல் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையின் கீழ் காவல்துறை மற்றும் பொதுத்துறைச் சார்ந்தவர்களைக் கொண்டு இவ்வலுவலகம் இயங்கி வருகிறது. Criminal Analysis, Innovation, Fugitive Investigative Support, Police Data Management, Forensic Support, Capacity Building and Training, Command and Coordination Center, Special Projects ஆகியவற்றின் மூலம் உறுப்பு நாடுகளின் விசாரணைகளுக்குத் தேவையான சிறப்பு நுண்திறன்களை இவ்வமைப்பு வழங்கி வருகிறது.
உறுப்பு நாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளவும், பொதுச்செயலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் பாதுகாப்பான வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு குற்றப் பகுதிகளில் செயல்படும் காவல்துறை மற்றும் புலன் விசாரணை வல்லுநர்களின் நடவடிக்கைகள், பணிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான அமைப்பினையும் இவ்வலையமைப்பு ஒருங்கிணைக்கிறது.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

⦁ குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் (பெயர்கள் மற்றும் கைரேகைகள் முதல் திருடப்பட்ட கடவுச்சீட்டுகள் வரை) குறித்த தகவல்களைக் கொண்ட 19 காவல் தரவுத்தளங்களை நிர்வகிக்கிறது. இதனை உறுப்பு நாடுகள் எந்த நேரத்திலும் அணுகும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
⦁ தடயவியல், பகுப்பாய்வு மற்றும் உலகம் முழுவதும் தப்பியோடியவர்களைக் கண்டுபிடிப்பதில் உதவி போன்ற புலனாய்வு ஆதரவை வழங்குகிறது. பல பகுதிகளில் இவ்வமைப்பு செய்து வரும் பணிகள் மற்றும் பயிற்சி முக்கியப் பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இதனால், இவ்வமைப்பின் சேவைகளுடன் எவ்வாறு திறனுடன் செயல்படுவது என்பதையும் உறுப்பு நாடுகள் அறிய முடிகிறது.
⦁ இன்றைய உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதம், Cyber Crimes, கூட்டுக் குற்றங்கள் (Organized Crimes) எனும் மூன்று குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
⦁ ஒவ்வொரு சிறப்புக் குற்றப்பகுதியிலும் பணிபுரியும் அதிகாரிகள் உறுப்பு நாடுகளுடன் இணைந்து புலனாய்வு ஆதரவு, களச் செயல்பாடுகள், பயிற்சி மற்றும் வலையமாக்கம் (Networking) உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்பாடுகளைச் செய்கின்றனர்.
⦁ முக்கியமாக, பல்வேறு புதிய குற்றங்கள் உருவாகி வருவதால், பன்னாட்டுக் குற்றங்கள் மற்றும் போக்குகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் எதிர்காலத்தைக் கண்காணித்து வரும் பணிகளையும் செய்து வருகிறது.
இன்டர்போல் அமைப்பின் அறிக்கைகள்
பன்னாட்டுக் காவல்துறையின் அறிவிப்புகள் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு, ஊதா எனும் ஏழு நிறக் குறியீடுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு நிறக் குறியீடும் தனித்தனி தன்மைகளைக் கொண்டது. அவை;
1. சிவப்பு அறிக்கை (Red Notice) – நீதித்துறை அல்லது பன்னாட்டு நீதிமன்ற அமைப்பின் அதிகார வரம்பின் மூலம் தேடப்படும் ஒரு நபரின் இடம் கண்டறிதல், கைது செய்திட அல்லது ஒப்படைக்கும் நோக்கில் தேடுவது.
2. நீல அறிக்கை (Blue Notice) – குற்றவியல் விசாரணையில் தொடர்புடைய ஒருவரைக் கண்டறிதல், அடையாளம் காணுதல் அல்லது தகவல்களைப் பெறுவதற்கானது.
3. பச்சை அறிக்கை (Green Notice) – பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு நபரின் குற்றச் செயல்கள் குறித்து எச்சரிக்கை செய்வதற்கானது.
4. மஞ்சள் அறிக்கை (Yellow Notice) – காணாமல் போன நபரைக் கண்டறிய அல்லது தன்னை அடையாளம் காண முடியாதிருக்கும் ஒரு நபரை அடையாளம் காண்பதற்கானது.
5. கருப்பு அறிக்கை (Black Notice) – அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கானது.
6. ஆரஞ்சு அறிக்கை (Orange Notice) – நபர்கள் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்தைக் குறிக்கும் உடனடி அச்சுறுத்தல்களான ஒரு நிகழ்வு, ஒரு நபர், ஒரு பொருள் அல்லது ஒரு செயல் குறித்து எச்சரிப்பது.

7. ஊதா அறிக்கை (Purple Notice) – மோசடிச் செயல்பாடுகள், நடைமுறைகள், பொருட்கள், சாதனங்கள் அல்லது குற்றவாளிகள் பயன்படுத்தும் மறைவிடங்கள் குறித்தத் தகவல்களை வழங்குவது.
மேற்காணும் ஏழு நிறக் குறியீடுகளாலான அறிக்கைகள் மட்டுமின்றி, ஒரு நபர் அல்லது தனி நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் தடைகளுக்கு உட்பட்டது எனும் அறிக்கையினை உறுப்பு நாடுகளுக்குத் தெரிவிக்கும், “பன்னாட்டுக் குற்றவியல் காவல் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் சிறப்பு அறிக்கை” எனும் சிறப்பு அறிக்கையும் இவ்வமைப்பால் வழங்கப்படுகிறது.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

