பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் “சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)’ மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் கீழ், 2003ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் சேராதவர்கள், தங்கள் பிறந்த தேதி மற்றும் இடம் தொடர்பான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், 1981 ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள், தங்கள் பெற்றோரின் பிறப்பிடம் தொடர்பான ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களைக் கண்டடிறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயரை நீக்கி வருவதாகக் கூறுகிறது.
மேலும், சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
