திமுக தொடங்கப்பட்டு 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் “தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் நிகழ்ச்சி நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய முற்போக்குப் புத்தகக் காட்சி நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நாம் அறிவுத்திருவிழா நடத்தியதே 4 நாட்களுக்குப் பின்னால் தான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
‘அறிவுத் திருவிழா ஏன் நடத்துகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள்.
அறிவிருப்பவன் அதற்கு அறிவுத் திருவிழா நடத்துகிறான். அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசுகிறோம் என அவர்களுக்குக் கோபம் வேறு. சுகாதாரம் பற்றி பேசுகையில் கிருமிகளைப் பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்.
எப்படி போலீஸ பார்த்த திருடனுக்குப் பயம் வருமோ, அப்படி அறிவுங்கிற வார்த்தைய கேட்டாலே அவங்களுக்கு அலர்ஜி வருகிறது” என்று பேசியிருந்தார்.
மேலும், “நாட்டில் எதிர்க்கட்சிகளை முடக்க இன்றைக்கு தேர்தல் ஆணையமே SIR வேலையில் ஈடுபட்டிருக்கிறது. தேர்தலையே திருட்டுத்தனமாக நடத்துவதற்கு முனைந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இதனை நாம் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார் உதயநிதி.
இந்நிலையில் உதயநிதியின் பேச்சை விமர்சித்திருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், “அறிவாளிகள்தான் அறிவுத் திருவிழா நடத்துவாங்க. அறிவில்லாதவர்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்’ என உதயநிதி பேசியிருக்கிறார்.
உதயநிதி அவர்களே நீங்கள் அறிவை வைத்துதான் துணை முதல்வர் ஆனீர்களா?
வாரிசு அடிப்படையில் துணை முதல்வர் பதவியைப் பெற்றவர் நீங்கள். ஆணவம் வேண்டாம் உதயநிதி, ஆணவம் வேண்டாம்.
