பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டுவருகிறது. இதில், இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் ஏற்றுக்கொள்ளும் அடையாள ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக குடியிருப்பு சான்றிதழை வைத்துள்ளது. தற்போது, அந்தக் குடியிருப்பு சான்றிதழிலேயே இப்படி ஒரு குளறுபடி நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னாவிற்கு அருகிலுள்ள மசௌர்ஹி என்ற நகரத்தில், RTPS (பொது சேவைகளுக்கான உரிமை) இணையதளத்தில் விசித்திரமான ஆவணம் வெளிவந்துள்ளது. அதில் ஒரு நாய்க்கு ‘நாய் பாபு’ (Dog Babu) என்ற பெயரில் குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நாய்க்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்பு சான்றிதழில், ஒரு நாயின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு, நாயின் தந்தை மற்றும் தாயின் பெயர்கள் ‘குட்டா பாபு’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நாய், கவுலிச்சக், வார்டு எண். 15, நகர் பரிஷத் மசௌர்ஹி என்ற முகவரியில் வசிப்பதாக குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாய் பாபுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழில், அந்தப் பகுதி வருவாய் அதிகாரி முராரி சவுகானின் டிஜிட்டல் கையொப்பமும் இருக்கிறது. மேலும், (சான்றிதழ் எண்: BRCCO/2025/15933581), இது ஆவணம் உண்மையானது மற்றும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட மோசடி அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.
இத்தகைய சான்றிதழ் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குறிப்பாக வருவாய் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட டாங்கிளைப் பயன்படுத்தி மட்டுமே டிஜிட்டல் கையொப்பங்களை அணுக முடியும் என்பதால், டாங்கிள் பயன்பாட்டில் ஏதும் முறைகேடு நடந்துள்ளதா அல்லது RTPS அமைப்பே செயலிழந்ததா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், அந்தச் சான்றிதழ் எண் டெல்லியில் உள்ள ஒரு பெண்ணின் சான்றிதழுடன் தொடர்புடையது எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய வட்ட அதிகாரி பிரபாத் ரஞ்சன், “இது நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடிய சம்பவம் அல்ல. கடுமையான நிர்வாக முறைகேடு வழக்கு. டாங்கிள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை விசாரணை தீர்மானிக்கும். RTPS ஆபரேட்டர் முதல் வருவாய்த் துறை ஊழியர்கள் வரை சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும்” தெரிவித்தார்.
July 28, 2025 4:27 PM IST
