இந்திய இளம் தொழிலதிபர் அனந்த் அம்பானியின் திருமணம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் உலகின் பல்வேறு துறை பிரபலங்கள் இன்று மும்பையில் சங்கமிக்க இருக்கின்றனர். திருமண விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் யார்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த் கேர் நிறுவனத்தின் நிறுவனரான பிரபல தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகாவுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதலே திருமண கொண்டாட்டங்கள் தொடங்கின.
திருமண வைபவத்தை தொடங்கியது முதலே அனைத்திலும் பிரமாண்டத்துக்கு பஞ்சமே இல்லை. திருமண அழைப்பிதழில் இருந்த நேர்த்தி உலகளவில் கவனத்தை ஈர்த்தது.
அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அண்மையில் சமூக விவாக நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இதில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 50 ஜோடிகளுக்கு கோலாகளமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு 1லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்களும் வழங்கப்பட்டன.
பின்னர் மும்பையில் நடந்த அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமண சங்கீத் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். கிரிக்கெட் வீரர்கள் தோனி, சூர்யகுமார் யாதவ், நடிகர்கள் சல்மான் கான் நடிகைககள் ஜெனீலியா, ஆலியா பட்,மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோர் சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிலையில் அனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி இன்று தொடங்கி 14 ஆம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. இன்று சுப விவாகம் என்ற நிகழ்ச்சியும், நாளை சனிக்கிழமை சுப ஆசிர்வாதம், ஞாயிற்றுக்கிழமை மங்கள உற்சவ நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு, அரசியல், தொழிலதிபர்கள், என பல துறை பிரபலங்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மகன் நர லோகேஷ், ஆந்திர துணை முதலமைச்சர் நடிகர் பவன் கல்யாணுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலங்களவை எம்.பி.கபில் சிபல் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திருமண வைபவத்தில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அரசியல்வாதியான ஜான் கெர்ரி, பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் டோனி பிளயர்,போரிஸ் ஜான்சன் ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டது.
ராம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் நாசர், சாம்சங் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜெய் லீ, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ ஆகியோருக்கும் அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அண்மையில் ஓய்வை அறிவித்த பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியை ஒட்டி, மும்பையே விழாக்கோலம் பூண்டுள்ளது
.
