நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் விலை உயர்வு
தமிழகத்தில் மதுபான சில்லறை விற்பனையை அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அரசு பெரிதாக எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முன்பே டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விலை உயர்வு
அதில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியலின்படி, 180 மிலி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலையில் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மிலி அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலையில் ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. 650 மிலி அளவு கொண்ட பீர் வகைகளின் விலையில் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விலை உயர்வு
இந்த விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2022-23 ஆண்டில் ஆயத்தீர்வை வாயிலாக தமிழக அரசுக்கு 10,401 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதேபோல, மதிப்பு கூட்டு வரியாக, 33,697 கோடி ரூபாய் கிடைத்தது. ஆக மொத்தம் அந்த ஆண்டில், அரசுக்கு 44,098 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய விலை உயர்வால் 2,400 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நிதி பற்றாக்குறை நிலவும் சூழலில் மது விற்பனையின் மூலம் திரட்டப்படும் இந்த கூடுதல் வருவாயானது அரசின் நிதிச் சுமையை ஓரளவுக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

