“நம்முடைய அரசியல் பாதை மிகவும் தெளிவாக உள்ளது. இதன் முதல் படியாக, லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து, ஒரு பிரமாண்டமான மாநாட்டை மூதூர் மதுரையில் வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். இது வெறும் கூட்டமல்ல; கொள்கையை வகுத்து, லட்சிய முழக்கத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் மாநாடாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் வகையில், அரசியல் முடிவும், தெளிவான தீர்மானமும், கொள்கைப் பிரகடனமும் இருக்கும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் அன்றைய தினம் லட்சிய உரையாற்ற இருக்கிறார் என்றும் பேசி எதிர்பார்ப்பை எகிறவைத்தார். ஆனால், அறிவிக்கப்பட்ட அந்த மாநாடு நடைபெறவில்லை.

‘தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது’ – ஓ.பி.எஸ்
மாநாடு குறித்த முடிவுகள் தெளிவாகாத நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்துக்குப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார், ஓ.பி.எஸ். முதலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றிக் கேட்டபோது, “எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். இந்தத் தேர்தலுக்குள் பல புயல், சூறாவளி வீசக்கூடும்” என்று பதிலளித்தார்.

