கும்பகோணத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் விழா மேடையிலேயே காங்கிரஸ் கட்சி எம்.பியிடம் நிதி கேட்டு திமுக எம்பி, எம்.எல்.ஏ வாக்கு வாதம் செய்ததது இருகட்சியினரிடமும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.71 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழாவும், ரூ.5.40 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், சுதா, எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சாக்கோட்டை அன்பழகன், “மயிலாடுதுறை எம்.பி சுதா புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாம் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெற வைத்திருக்கிறோம். கஷ்டமே இல்லாமல் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் முதன் முதலில் அடிக்கல் நாட்டும் போது அமைச்சர்கள் இரண்டு பேரும், முதல் செங்கல்லை சுதாவை வைக்கச் சொல்ல அவரும் கல்லை வைத்தார். புதிதாக கட்டப்பட உள்ள கட்டடத்தின் மொத்த தொகையில் ரூ.2 கோடியை அவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தர வேண்டும் தருவார் என நினைக்கிறேன்.
நம் வெற்றியில் தான் சுதா எம்.பியாக இருக்கிறார். உங்களிடம் ஒன்று கொடுத்து விட்டு ஒன்றை கேட்கிறோம். உங்கள் வெற்றிக்கு நாங்கள் பங்களித்து விட்டு கேட்கிறோம். எம்.பி பெரிய மனது வைத்து நிதி தருவார் என கருதுகிறேன்” என்றார்.
