சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஜாபர் சாதிக்
டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல் ஒன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்றும் கூறப்படுகிறது.
அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டார்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இது குறித்து அறிக்கை ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

ஜாபர் சாதிக்
இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும், அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளதாக அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன் ஜாபர் சாதிக் திமுக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ‘சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது’ துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
