டெல்லி செங்கோட்டை அருகில் கார் வெடித்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த கார் வெடிப்பில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது?
இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துக்கொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இந்த நிலையில், டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் என்பவரரை அடையாளம் கண்டிருக்கிறது என்.ஐ.ஏ.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்த விவகாரத்தை அரசு மிகுந்த தீவிரத்துடன் அணுகுகிறது. இந்த துயரத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தப்பமாட்டார்கள் என்பதை நான் தேசத்திற்கு உறுதியாக உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மேடையில் இருந்து, நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் சம்பவம் குறித்து விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன.
விசாரணையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில், மக்கள் அமைதி காக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
