ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை ரயில்வே மாவட்டத்தில் (சென்னை முதல் ஊட்டி வரை) உள்ள 250 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் 650 ரயில்வே போலீசார் இரவு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கார் உரிமையாளர் கைது
டெல்லி செங்கோட்டை அருகே வெடித்த ஹூண்டாய் ஐ20 காரின் உரிமையாளரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இரங்கல்
வாகன வெடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட டெல்லி முதல்வர், “செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்புச் சம்பவம் மிகுந்த வேதனையும் அச்சமும் உண்டாக்குகிறது. இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளும் உறுதி செய்யப்படுகின்றன. டெல்லி காவல்துறை, NSG, NIA மற்றும் FSL ஆகிய குழுக்கள் முழு விசாரணையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. டெல்லி குடியிருப்பாளர்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பவும்.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. டெல்லியில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன் பீகார், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியாணா, கேரளா, உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மோடி இரங்கல்
வாகன வெடிப்பு குறித்து ஆராய்ந்துவரும் பிரதமர் மோடி, “இன்று மாலை டெல்லியில் நடந்த வெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை ஆய்வு செய்தேன்.” என சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை
டெல்லி வெடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இழப்பால் ஆழ்ந்த துயரமடைந்தேன். இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
அதே நேரத்தில், ஃபரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையைப் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்களும் பல AK-47 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையை மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் இருக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த தவறாத நடவடிக்கைகளை செயல்படுத்தவும் வலியுறுத்துகிறேன். கடலோரப் பகுதிகளில் சிறப்பு கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும், இதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் வலுவான உளவு அமைப்புகள் தேவை.” எனக் கூறியுள்ளார்.
MK Stalin அறிக்கை
வாகன வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “டெல்லியின் செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு பல அப்பாவி உயிர்களைப் பறித்ததால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அங்கிருந்து வரும் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன. இழப்பைச் சந்தித்துள்ள குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களையும், காயங்களுடன் போராடுபவர்களுக்கு எனது ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வலிமை மற்றும் விரைவான குணமடைதலுக்காக வேண்டுகிறேன்.” என எழுதியிருக்கிறார்.
தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
கார் வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் காவல்துறையினர் விழிப்புடன் இருக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னையிலும் கோவையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை நகர காவல் ஆணையர் A சரவண சுந்தர், “வழக்கமாக இரவு ரோந்து பணியில் 300 காவலர்கள் ஈடுபடுவார்கள். இன்று 600 ஆக உயர்த்தியிருக்கிறோம். நகரம் முழுவதும் வாகன சோதனை நடைபெறுகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
“டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்” – அரவிந்த் கெஜ்ரிவால் கவலை
முன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “ரெட் ஃபோர்ட் அருகே வெடிப்பு நடந்த செய்தி மிகவும் கவலையளிக்கிறது. இதில் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, இது ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெடிப்பு எவ்வாறு நடந்தது, இதற்குப் பின்னால் ஏதேனும் பெரிய சதி உள்ளதா என்பதை காவல்துறையும் அரசும் உடனடியாக விசாரிக்க வேண்டும். டெல்லியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.
டெல்லி கமிஷனர் சொல்வதென்ன?
டெல்லி கமிஷனர், “இன்று மாலை 6:52 மணியளவில் மிகவும் மெதுவாக வந்து சிகப்பு விளக்கு அருகே நிறுத்தப்பட்ட கார் வெடித்துள்ளது. சக்திவாய்ந்த வெடிப்பால் அருகில் இருந்த கார்களும் சேதமடைந்துள்ளன. FSL முதல் NIA வரை அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளன. சிலர் இறந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். நிலமையைக் கண்காணித்து வருகிறோம். உள்துறை அமைச்சர் எங்களை அழைத்தார், அவரிடம் தகவலைப் பகிர்ந்துள்ளோம்.” எனக் கூறியிருக்கிறார்.
அமித் ஷா, மோடி ஆய்வு
உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி கமிஷனரிடம் நிலைமையைக் கேட்டறிந்தார். பிரதமர் மோடி சூழலை ஆய்வு செய்து வருகிறார்.
8 பேர் உயிரிழப்பு
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 24 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன. தீவிர சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டவர்களை அருகே இருக்கும் ‘LNJP’ மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர்
Delhi Car Blast
இன்று (நவ 10) மாலை 6.50 மணியளவில் டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த சம்பவத்தால் அருகே இருந்த நான்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. சக்தி வாய்ந்த இந்த வெடிப்பால பல மீட்டர் தொலைவில் இருந்த கார்களின் கண்ணாடிகளும் சிதறியதாகக் கூறப்படுகிறது.
