புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆகி ஜாமின் பெற்றார். ரூ.15 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி அரசின் 2021-2022ம் ஆண்டின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த விவகாரத்தில் நடந்த பணமோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையும் சிசோடியா உள்ளிட்ட்டோரை கைது செய்தது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை இதுவரை எட்டு முறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால், அவற்றை கெஜ்ரிவால் நிராகரித்தார். தேவைப்பட்டால், ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக பதில் அளிக்க தயாராக இருப்பதாக அமலாக்கத் துறைக்கு பதில் அனுப்பினார். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் மீது நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது.
அமலாக்கத் துறையின் மனுவுக்கு, இன்று (மார்ச் 16) ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் படி, இன்று டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆனார். அப்போது, அவருக்கு ஜாமின் வழங்கி, ரூ.15 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

