குவாலியர்; ‛‛ மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்காக காங்கிசின் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளது” என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛ இண்டியா’ கூட்டணியை அமைத்து உள்ளன. இக்கூட்டணியில் மே.வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி இடம்பெற்று உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் தருவதாக மம்தா கூறினார். ஆனால், காங்கிரஸ் அதனை ஏற்காமல் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என அடம்பிடிக்கிறது.
இதனையடுத்து, அக்கட்சியை கழற்றிவிட்டு அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம் என மம்தா அறிவித்துள்ளார். மேலும், தேசிய அளவில் ‛ இண்டியா’ கூட்டணியில் நீடிக்கிறோம் எனவும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், குவாலியரில் நிருபர்களிடம் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பா.ஜ.,வை வீழ்த்துவதே எங்களின் நோக்கம், ‛ இண்டியா’ கூட்டணியில் நீடிக்கிறோம். என மம்தா கூறியுள்ளார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவரின் முக்கியத்துவம் மற்றும் நோக்கத்தை இதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
காங்கிரசின் கதவுகள் அடைக்கப்படவில்லை. மே.வங்கத்தில் 42 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என மம்தா தான் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது. கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

